Monday, June 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையைத் தாக்குமா எல் நினோ? நிபுணர்கள் கருத்து

இலங்கையைத் தாக்குமா எல் நினோ? நிபுணர்கள் கருத்து

பசுபிக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக உருவாகும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இருப்பினும், இதனால் இலங்கைக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக காலநிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது குறித்து சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலகத்தின் பணிப்பாளர் லீல் ரந்தெனிய தெரிவித்துள்ளதாவது, இலங்கை தற்போது தென்மேற்கு பருவக்காற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதுடன், இது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும் என்றாலும், பருவமழை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படும் இடைப் பருவமழைக் காலத்தில், நாட்டின் வருடாந்த மழையளவில் சுமார் 30 சதவீத மழை வீழ்ச்சி பொதுவாகக் கிடைக்கின்றது.

இலங்கை ஒரு கடல்சார் காலநிலை வலயத்தில் அமைந்திருப்பது அதன் வானிலை அமைப்பைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என அவர் விளக்கியுள்ளார்.

மேற்கு இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றங்களும், நாட்டின் மத்திய மலைநாடும் இணைந்து மழை வீழ்ச்சி பரவலைத் தீர்மானிக்கின்றன.

எல் நினோ உலகளாவிய வானிலை அமைப்புகளை சீர்குலைக்கக் கூடியதாக இருந்தாலும், இலங்கையின் தீவுப் புவியியல் அமைப்பும், வளிமண்டலத்தில் தொடர்ச்சியாகக் காணப்படும் ஈரப்பதமும் நீண்டகாலக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.

வானிலை ஆய்வாளர்களின் கணிப்பின்படி, எல் நினோ நிலைமைகள் உருவானால், அது அடுத்த ஆண்டு பெப்ரவரிக்கு பின்னரே தோன்றும் என்பதுடன், அது வடகீழ் பருவமழைக் காலத்துடன் ஒத்துப்போகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேலாண்மை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments