அதுமட்டுமல்லாமல், நமக்கு தேவைப்படும் முக்கியமான பொருள் சரியான நேரத்தில் கிடைப்பது, உற்பத்திக்கு முன்னுரிமை கிடைப்பது ஆகியவையும் நமக்கு சாதகமாக இருக்கும்.
மூன்றாவது அதிரடியாக ஆப்பிள் நிறுவனத்தின் இன்வென்டரியை குறைத்தார். 1997-ல் ஆப்பிளின் இன்வென்டரி சுமார் 31 நாளுக்குத் தேவையான அளவில் இருந்தது. டிம் குக் வந்த சில ஆண்டுகளில் அதை வெறும் சில நாள்களாகக் குறைத்தார். அதாவது, கிடங்கில் பணத்தைப் போட்டு வைத்திருப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் நிலையை உருவாக்கினார்.
இதன் விளைவு? ஆப்பிளின் பணச் சுழற்சி வேகமெடுத்தது. பணம் வேகமாகத் திரும்பி வந்தால், அதே பணத்தை மீண்டும் மீண்டும் தொழிலில் பயன்படுத்த முடியும். அதனால் அதிகமான லாபத்தையும் பெற முடியும்.
ஒரு பக்கம் ஸ்டீவ் ஜாப்ஸ், ‘மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் பொருளை எப்படி உருவாக்குவது?’ என்பதில் கவனம் செலுத்தினார். இன்னொரு பக்கம் டிம் குக், ‘அந்தப் பொருளை எவ்வளவு திறமையாகவும் குறைந்த மூலதனத்திலும் தயாரித்து உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது?’ என்பதில் கவனம் செலுத்தினார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் மதிப்பை உயர்த்தினார். டிம் குக் ஆப்பிளின் ஒட்டுமொத்த வொர்க்கிங் சிஸ்டத்தை வலுப்படுத்தினார். அதனால்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்குப் பிறகும் ஆப்பிள் கொடிகட்டிப் பறக்கிறது. இன்று, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மேலும் வளர்ந்திருக்கிறது.
ஒரு தொழிலில் வெற்றி பெறுவதற்கு எப்போதும் ‘புதுமையான ஐடியா’ மட்டுமே போதாது. அந்த ஐடியாவைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தும் சிஸ்டம் வேண்டும். வாடிக்கையாளர்களைக் கவரும் தயாரிப்பை உருவாக்குவது ஒரு திறமை. அதை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான செலவில் தயாரித்து, உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது இன்னொரு மிகப்பெரிய திறமை. ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மிகப்பெரிய கனவு இருந்தது. டிம் குக் அந்தக் கனவுக்கு இறக்கை பூட்டி பறக்க வைத்தார்.
கடந்த 15 ஆண்டு காலத்தில் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை சுமார் 13 மடங்கு உயர்த்தி உள்ளார். அதாவது 350 பில்லியன் டாலரிலிருந்து 4.5 டிரில்லியன் டாலராக உயர்த்தி உள்ளார்.
இப்போது ஆப்பிளின் புதிய சி.இ.ஓ-வாக ஜான் டெர்னஸ் பதவி ஏற்றிருக்கிறார். இவர் 2001-ல் ஆப்பிளின் டிசைன் டீமில் சேர்ந்தவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் நிறுவனத்தில் பயணிப்பவர். ஸ்டீவ் ஜாப்ஸ், டிம் குக் ஆகியோரின் வழியில் ஜான் டெர்னஸ் எப்படி செயலாற்றுவார் இவர் தலைமையில் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த டெக்னாலஜி உலகமுமே காத்திருக்கிறது.