அண்மையில் இடம்பெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் ஆடவர் இந்திய அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றது.
பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் குறித்த தொடரில் 3 தடவைகள் நேருக்கு நேர் மோதிய நிலையில் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், உலக கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று (5) மோதவுள்ளன.
இந்தப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சூரிய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் செயற்பாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அதன் அணித் தலைவர் கடுமையாக சாடி வரும் நிலையில் குறித்த இரண்டு மகளிர் அணிகளின் இன்றைய போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நேற்றைய இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கும் மழையினால் பாதிப்பு ஏற்படுவதற்காக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.


