Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.

இன்று முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், பிரித்தானிய புகலிடக் கொள்கையில் கடந்த பல தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.

புதிய விதிகளின்படி, அகதி அந்தஸ்து பெற்றவர்களின் வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை (இரண்டரை ஆண்டுகள்) மறுபரிசீலனை செய்யப்படும்.

அந்த காலக்கட்டத்தில் அவர்களின் தாய்நாடு பாதுகாப்பானதாகக் கருதப்பட்டால், அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இருப்பினும், தனியாக வந்து புகலிடம் கோரிய சிறுவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும்.

மற்றொரு சீர்திருத்தமாக, புலம்பெயர்ந்தோர் நிரந்தரக் குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கான காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவுள்ளது.

குறிப்பாக அகதி அந்தஸ்து பெற்றவர்கள் நிரந்தர உரிமையைப் பெற 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

அண்மையில் டென்மார்க்கிற்கு விஜயம் செய்த ஷபானா மஹ்மூத், அங்குள்ள கடுமையான குடிவரவு விதிகளை அவதானித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

“சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் வருபவர்களுக்கு நமது நாடு கவர்ச்சிகரமானதாக இருக்கக்கூடாது என்பதே எமது நோக்கம் எனவும் அகதி அந்தஸ்து என்பது நிரந்தரமானது என்ற எண்ணத்தை மாற்ற விரும்புகிறோம்” என்றும் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்கள் தொழிற் கட்சியின் இடதுசாரி உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அகதிகள் தங்களின் நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற அச்சத்தில் இருந்தால், அவர்களால் வேலைவாய்ப்புகளில் ஈடுபடவோ சமூகத்துடன் இணையவோ முடியாது என ‘அகதிகள் கவுன்சில்’ (Refugee Council) எச்சரித்துள்ளது.

இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களை விடுதிகளில் தங்கவைக்கும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்று கூறிய மஹ்மூத், இதில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தொழிற் கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 4ஆயிரத்து 472 பேர் சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments