Tuesday, March 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் நேற்றிரவு நடைபெற்ற சுப்பர் 8 போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கையை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

எனினும், அந்த வெற்றி அரையிறுதிக்கு செல்வதற்கு அவர்களுக்கு போதுமான புள்ளிகளை வழங்காதபடியால் பாகிஸ்தான் அணியினதும் டி:20 உலகக் கிண்ணத்துக்கான கனவு கண்டி, பல்லேகலயில் நேற்றைய தினம் நிறைவுக்கு வந்தது.

இதனால் நியூஸிலாந்து அணி இங்கிலாந்துடன் இணைந்து குழு 2 இல் அரையிறுதிக்கு முன்னேறியது.

நேற்றிரவு நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பர்ஹானும், பகார் ஜமானும் அதிரடி காட்டினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் சேர்த்தது.

பகார் ஜமான் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பர்கான் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 09 பவுண்டரிகள் உள்ளடங்களாக சதமடித்தார்.

ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் சார்பில் மதுஷங்க அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில் பத்தும் நிஸ்ஸங்க மற்றும் கமில் மிசார ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் நிஸ்ஸங்க 3 ஓட்டங்களும், மிசார 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய சரித் அசலங்க 25 ஓட்டங்களும், கமிந்து மெண்டீஸ் 3 ஓட்டங்களும், லியனகே 5 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவன் ரத்நாயக்க தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் தசூன் ஷானக்க அதிரடி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து பவன் ரத்நாயக்க 37 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

முடிவில் அதிரடியில் மிரட்டிய ஷானக்க 76 (31) ஓட்டங்களும், வெல்லாலகே 2 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது.

கடைசி ஓவரில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை அணித் தலைவர், ஷாஹீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து இறுதி பந்தில் ஆறு ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.

ஆனால், இறுதி பந்தை வைட் என்று அழைப்பார்கள் என்று நினைத்து ஷானக்க அதை தவற விட்டார்.

எனினும், மைதான நடுவர் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றும், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

முன்னதாக பாகிஸ்தான் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments