கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி எஹெலியகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும், அது 171 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளதாகவும் கடமைநேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அத்துடன், நேற்று (21) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதாகவும், சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கீழ் வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவற்றில் சில இடங்களில் இன்றும் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்க முடியும் என்றும், குறிப்பாக இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கடமைநேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில், குறிப்பாக காலி முதல் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில், திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் இன்று அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பிரதானமாக வடமேற்குத் திசையிலிருந்து வீசும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மாத்தறை முதல் பொத்துவில், திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த கடமைநேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ:
“பலரின் கவனமும் இன்று கண்டி பிரதேசத்தின் மீது திரும்பியுள்ளது. குறிப்பாக பல்லேகலையில் நடைபெறும் இந்த உலகக் கிண்ணப் போட்டி தொடர்பில். தற்போது எம்மிடம் உள்ள புதிய தரவுகளின்படி பார்த்தால், குறிப்பாக கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலை காணப்படுகிறது. எனவே, மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை நாங்கள் இன்னும் கூற வேண்டியுள்ளது. நாளையின் பின்னர் முக்கியமாக மழை குறைவடைவதை எதிர்பார்க்க முடியும்.”


