நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் அடுத்தடுத்து இரு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது .
இக்குண்டு வீச்சையடுத்து அப்பகுதியில் வசிப்போர் அச்சமும், பீதியும் அடைந்தனர்.
நோர்வே பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த பகுதியைச் சுற்றி வளைத்தபோது அங்கு வெடிக்காமல் இருந்த கையெறி குண்டு ஒன்றை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர்.
இதேவேளை அங்கு சுற்றித்திரிந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்து பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஒஸ்லோ பொலிஸ் தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் கூறியதாவது;
மத்திய ஒஸ்லோ பகுதியில் குண்டு வெடித்துள்ளது. தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம்.
சம்பவம் நடந்த இடம், தற்போது முழு பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிஸ்லெட் ஸ்டேடியத்தில் இருந்து கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக சென்றதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
காரில் இருந்து இரு கையெறி குண்டுகளை அவர்கள் வீசிச் சென்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர். விசாரணை தொடர்கிறது என்றார்.
குண்டுகள் வெடித்த பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம், குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அப்பகுதி மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


