இஸ்ரேலில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்கு
மாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் செய்திகள், இணைப்புகள் (Links) அல்லது கோப்புகளை (Files) எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சைபர் தாக்குதல்களை முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு இடையிலான போர் இன்று 11-ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட தூதுவர், நேற்று இரவு மட்டும் இஸ்ரேலில் ஏழு முறை அபாயச் சங்கொலிகள் (Siren) ஒலிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, இராணுவ மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை இலக்கு வைத்தே ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது தொடர்பாடல் சாதனங்கள் ஊடாகத் தரவுகளைத் திருடும் முயற்சிகள் நடைபெறலாம் என்பதால், அறிமுகமில்லாத தொலைபேசி எண்கள் அல்லது சமூக வலைதளக் கணக்குகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையர்கள் உள்ளூர் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


