Thursday, November 21, 2024
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டு நியமனம்

அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டு நியமனம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது மந்திரி சபை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறும் தலைவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அவ்வகையில், முன்னாள் எம்.பி. துளசி கபார்டை (வயது 43) தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, “முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கபார்டு, தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார். அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்து உள்ள அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

ஜனநாயகக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான துளசி கபார்டு, 2022-ம் ஆண்டில் அக்கட்சியிலிருந்து விலகினார். 2024-ம் ஆண்டில் குடியரசு கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார்.

ஹவாய் மாநிலத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. ஆவார். ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவரது தாய் கரோல் கபார்டு இந்துவாக மதம் மாறினார். தனது 5 குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார். துளசி கபார்டும் இந்து மதத்தை பின்பற்றுகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்டு முக்கியமானவர். பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராகவும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். கமலா ஹாரிசுடன் டிரம்ப் நேருக்கு நேர் விவாதம் நடத்தவும் துளசி உதவி செய்தார். அவரது செயல்பாடுகள் டிரம்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு நாட்டின் மிக முக்கிய பதவியான உளவுத்துறை இயக்குனர் பதவியை வழங்கி உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments