சவூதி அரேபியாவின் மேற்கு செங்கடல் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ரபிக் (Rabigh) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யேமனைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், தமது தாக்குதல் இலக்கை நேரடியாகத் தாக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ இரசாயன உற்பத்தி மையங்களில் ஒன்றாக விளங்கும் பெட்ரோ ரபிக் (Petro Rabigh) தொழிற்சாலை, சவூதி அராம்கோ மற்றும் ஜப்பானின் சுமிடோமோ கெமிக்கல் நிறுவனங்களின் கூட்டுத் திட்டமாகும்.
செங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, சவூதி அரேபியாவின் எரிசக்தி மற்றும் பெட்ரோ இரசாயன உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் அல்லது உற்பத்திப் பாதிப்புகள் தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
யேமனில் நீண்டகாலமாக நிலவி வரும் உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகச் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய நாடுகளின் முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து அவ்வப்போது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான நிலையில் உள்ள பாதுகாப்புச் சூழலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது


