ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றை எட்ட முடியும் என நம்புவதாக பிரித்தானியாவின் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2016ஆம் ஆண்டு பிரெக்ஸிட் வாக்கெடுப்பின்போது மக்கள் எதிர்பார்த்து வாக்களித்த நிலைப்பாட்டிற்கு இந்த ஒப்பந்தம் நெருக்கமானதாக அமையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மேலும் நெருக்கமாக்குவது குறித்து பிரித்தானியப் பிரதமர் ஆராய்ந்து வரும் நிலையில், எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உணவு, எரிசக்தி மற்றும் இளைஞர்களின் நடமாட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை அயர்லாந்தில் ஐரோப்பியத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட ஆண்டி பர்ன்ஹாம், இந்த ஒப்பந்தம் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் பிரித்தானியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும், ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டம் வரை நீடிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தொழிற்கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை மீளமைக்கும் நடவடிக்கையை விமர்சித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி, பிரித்தானியாவை மறைமுகமாக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்ல தொழிற்கட்சி முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரெக்ஸிட் நடவடிக்கை நன்மைகளை விட அதிக பாதிப்புகளையே ஏற்படுத்தியுள்ளதாக ஆண்டி பர்ன்ஹாம் முன்னர் தெரிவித்திருந்தாலும், அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் உறவில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை.
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான தொழிற்கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை, சுங்க ஒன்றியம் அல்லது சுதந்திரமான நடமாட்ட முறைமைக்குத் திரும்பப்போவதில்லை என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, பிரெக்ஸிட்டைச் சிறப்பாகச் செயல்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீளமைப்பதே கட்சியின் நோக்கம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 2025 மே மாதத்தில் மீன்பிடி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றை எட்டியிருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் உச்சிமாநாட்டில் பிரித்தானிய அரசாங்கம் மேலும் பல மாற்றங்கள் தொடர்பான இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு முயற்சிக்கவுள்ளது.


