கனடாவின் மிகப்பெரிய மத்திய அரசாங்க பொதுச்சேவை ஊழியர்களின் தொழிற்சங்கமான, Public Service Alliance of Canada (PSAC), மத்திய அரசாங்கத்துடனான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் அடுத்த மாதம் முதல் 1,20,000 ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பு November 16 ஆம் திகதி முதல் January 22 ஆம் திகதி வரை நடைபெறும் என பொதுச் சேவை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கத்திற்கும் கனடா மத்திய அரசாங்கத்தின் திறைசேரிக்கும் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆண்டுக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை, கடந்த May மாதம் PSAC தொழிற்சங்கம் “அவமதிக்கும் வகையிலானது” எனக் கடுமையாக விமர்சித்திருந்தது.
சம்பள உயர்வு, வேலைப் பாதுகாப்பு, தொலைதூரப் பணி மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்திலிருந்து ஊழியர்களைப் பாதுகாப்பது போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் மறுத்து வருவதாக PSAC தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வேலைநிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ள ஊழியர்களில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு வீரர்கள், கடவுச்சீட்டு மற்றும் நலன்புரிச் சேவை அதிகாரிகள், மீன்பிடித்துறை அதிகாரிகள், மத்திய அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள், நூலகர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 1,55,000 மத்திய அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் ஏறத்தாழ இரண்டு வாரங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த ஒப்பந்தக் காலப்பகுதிக்காக மொத்தம் 12.6 சதவீத ஊதிய உயர்வைப் பெற்றுக்கொண்டனர்.


