Wednesday, October 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத் தளம்பல் தாழ்வு பிரதேசமாக உருவாக வாய்ப்பு!

இலங்கையைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத் தளம்பல் தாழ்வு பிரதேசமாக உருவாக வாய்ப்பு!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் தாழ்வுப் பிரதேசமாக உருவாகும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களிலும் இன்று (21) முதல் அடுத்துவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் எனத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்பில் மீனவர்கள், கடலோரப் பகுதிகளில் வசிப்போர் உள்ளிட்ட பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.

 

கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசும் அபாயம்!

இதற்கிடையில், கொந்தளிப்பான கடற்பிராந்தியங்கள் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 4.15 மணிக்கு வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று காலை 10.15 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். இதன்போது கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

எனவே, குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments