கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் குடியேற்றக் கொள்கை தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் இனவாதக் கருத்துகளால் திசைதிருப்பப்படக்கூடாது என முன்னாள் முதல்வரும் முன்னாள் குடிவரவு அமைச்சருமான ஜேசன் கென்னி வலியுறுத்தியுள்ளார்.
குடியேற்றக் கொள்கை தொடர்பான முடிவுகள் உண்மைகள், தரவுகள் மற்றும் சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ‘Our Alberta Advantage’ அமைப்பின் இணை நிறுவனர் அவ்னிஷ் நந்தா, வாக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள குடியேற்றம் தொடர்பான கேள்விகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார்.
குறித்த கேள்விகள் குடியேற்றக் குடும்பங்களை இலக்குவைப்பதாகவும், பல தசாப்தங்களாக ஆல்பர்ட்டாவில் வாழ்ந்து சமூகத்தில் வேரூன்றியுள்ள மக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குடியேற்றக் கட்டுப்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், கனடாவின் பன்முகக் கலாசார அடையாளம் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், ஆல்பர்ட்டாவில் குடியேற்றக் கொள்கை தொடர்பான விவாதம் அரசியல் மட்டுமன்றி, சமூக மற்றும் கலாசார ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


