கனடாவில் குடியேற்ற அளவுகள் மீண்டும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் லீனா டியாப் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கனடாவின் சனத்தொகை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் மந்தமடைந்துள்ள நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
கனடாவின் குடியேற்ற முறைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், சனத்தொகையைப் படிப்படியாகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி கடந்த செப்டெம்பர் மாதம் The New York Times ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
ஒன்ராறியோவின் கிச்சனர் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வீடுகளின் விலை மற்றும் வாடகைச் செலவுகள் தொடர்பான கவலைகள் நீடிக்கும் நிலையில் குடியேற்றத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சர் லீனா டியாப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த சனத்தொகை வளர்ச்சி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க மனிதவளம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஜி7 நாடுகளில் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக கனடாவை மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அந்த இலக்கை அடைவதற்குக் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.
குடியேற்றக் கொள்கைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்த விரிவான திட்டம், ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
2024ஆம் ஆண்டு முதல் குடியேற்றக் கட்டுப்பாடுகள்
கனடாவில் 2020களின் ஆரம்பத்தில் குடியேற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் 2024ஆம் ஆண்டு குடியேற்ற அளவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
இதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மார்க் கார்னி குடியேற்றத்தை நிலையான அளவுகளுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார்.
தற்போதைய அரசாங்கம், 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண்டுதோறும் நிரந்தர வதிவிட அனுமதிகளைப் பெறுவோரின் இலக்கை 380,000 ஆக நிர்ணயித்துள்ளது. முன்னதாக ட்ரூடோ அரசாங்கத்தின் இலக்கு ஆண்டுக்கு 500,000 ஆக இருந்தது.
அத்துடன், 2026ஆம் ஆண்டில் தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 43 சதவீதத்தால் குறைப்பதற்கான இலக்கையும் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் முன்வைத்திருந்தது.
இதற்கிடையில், கனடாவின் குடியேற்ற இலக்குகள் மேலும் குறைக்கப்பட வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிச்செல் ரெம்பல்-கார்னர் முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2026 ஜூலை 1ஆம் திகதியன்று நாட்டின் சனத்தொகை சுமார் 41.8 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஜூலை முதல் 2026 ஜூலை வரையான காலப்பகுதியில் சனத்தொகை 189,425 பேரால் அல்லது 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இது 1944–1945ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த ஜூலை முதல் ஜூலை வரையான சனத்தொகை வளர்ச்சியாகும்.
மேலும், கனடாவின் வயதான சனத்தொகை மற்றும் குடியேற்றக் குறைவு ஆகியவை தொழிலாளர் எண்ணிக்கையிலும் மக்களின் நுகர்வுப் பழக்கங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதாக கனடா மத்திய வங்கி அண்மைய ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, குடியேற்றக் கொள்கையில் கனடா அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட மாற்றங்கள் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன், புதிய திட்டம் நவம்பரில் வெளியான பின்னரே குடியேற்ற இலக்குகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த தெளிவான விபரங்கள் தெரியவரும்.


