Thursday, October 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய அணியின் தோல்வியை கடுமையாக விமர்சித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய அணியின் தோல்வியை கடுமையாக விமர்சித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ரி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் துடுப்பாட்டக்காரருமான முகமது கைஃப் (Mohammad Kaif), இந்திய அணியின் செயல்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணியின் கட்டமைப்பு (team combination) குறித்து முகமது கைஃப் அதிருப்தி தெரிவித்தார்.

பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி ரி20 போட்டிக்கு முன்னதாக, இந்தத் தொடர் தற்போது 2-2 என்ற சமநிலையில் உள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சுத் தாக்குதலை விமர்சித்த கைஃப், இதே போன்ற பந்துவீச்சு வரிசையுடன் சென்றால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள ரி20 உலகக் கோப்பையில் இந்திய அணியால் தங்கள் பட்டத்தைத் தக்கவைக்க முடியாது என்று கூறினார்.

அத்துடன், இந்திய அணி தோல்வியடைந்ததற்குக் காரணம் அவர்களின் பந்துவீச்சுதான். இதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும்.

247 ஓட்டங்கள் என்பது மிக அதிக ஓட்டங்கள். மோசமான பந்துவீச்சால்தான் நாம் தோற்றோம், எதிரணிக்கு இவ்வளவு ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருக்கக் கூடாது. இது முதல்முறை நடப்பதும் அல்ல.

பொதுவாக, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் துடுப்பாட்டக்காரர்கள் மூன்று போட்டிகளில் வெற்றியைத் தேடித்தருவார்கள், பந்துவீச்சாளர்கள் மற்ற போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள். ஆனால் இங்கே, பந்துவீச்சாளர்கள் எந்தப் போட்டியிலும் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்த அணியின் கட்டமைப்பை வைத்துக்கொண்டு உங்களால் ஒருபோதும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று கடுமையாகச் சாடினார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர், தாங்கள் வீசிய தலா நான்கு ஓவர்களில் மொத்தம் 104 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர். அதேபோல், அக்சர் படேல் தனது நான்கு ஓவர்களில் 45 ஓட்டங்களை கொடுத்தார். பிரின்ஸ் யாதவ் 36 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி, இந்திய பந்துவீச்சாளர்களிலேயே ஓரளவு சிறப்பாகச் செயல்பட்டார்.

இந்தத் தோல்விக்குப் பிறகு கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், போட்டியின் தொடக்கத்திலேயே பந்துவீச்சில் இந்திய அணி பின்தங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் மீண்டும் ஒரு அபார சதத்தை விளாசினார். கடந்த மாதம் ஆரம்பமான இந்தச் சுற்றுப்பயணத்தில், அவர் விளையாடிய ஏழு போட்டிகளில் இது அவரது நான்காவது சதமாகும்.

ஹோப்பின் இந்தச் சதத்தின் உதவியுடன், மேற்கிந்தியத் தீவுகள் அணி 247 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. இதை எட்ட முடியாமல் திணறிய இந்திய அணி, இறுதியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments