வழக்கமாகப் பச்சை மற்றும் நீல நிறங்களில் ஒளிரும் வடக்கு வானொளி, இந்த ஆண்டில் அரிதான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என வானியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்த இளஞ்சிவப்பு வண்ணத்தைக் காண்பதற்கு உகந்த ஆண்டாக நடப்பு 2026-ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
கனடா விண்வெளி ஆய்வு மையத்தின் விளக்கப்படி, அதீத ஆற்றல் கொண்ட சூரியத் துகள்கள் வளிமண்டலத்தின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி நைட்ரஜன் மூலக்கூறுகளுடன் வினைபுரியும் போது இந்த அரிய இளஞ்சிவப்பு ஒளி வானில் உதிக்கிறது. இந்த அதிசய நிகழ்வைக் காண்பதற்கு கனடா மிகவும் உகந்த நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து ஏர் நிறுவனம் எட்டு நாடுகளில் உள்ள முப்பத்தைந்து வானொளிக் கண்காணிப்பு மையங்களை ஆய்வு செய்தது. வானின் இருள் தன்மை, போக்குவரத்து வசதி, வண்ணத்தின் அடர்த்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஜாஸ்பர் மெலின் ஏரி உலகிலேயே முதன்மையான இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள வானம் தெளிவான இருள் தன்மையைக் கொண்டுள்ளதால் வண்ணங்கள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன.
மேலும், யெல்லோனைஃப் அருகே உள்ள பிரிலூட் ஏரி இரண்டாவது சிறந்த இடமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இந்த அரிய இளஞ்சிவப்பு வானொளியைக் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது.


