Tuesday, October 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்682 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நாகொலகனே சரணாலயம்

682 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நாகொலகனே சரணாலயம்

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேச செயலகப் பிரிவில் 682 ஹெக்டேயர் நிலப்பரப்பை உள்ளடக்கிய நாகொலகனே சரணாலயத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீண்டகாலமாகக் காடாகக் காணப்பட்ட சுமார் 1,500 ஏக்கர் காணியில், சில தனியார் நிறுவனங்கள் பணப்பயிர்ச்செய்கை, கனிம அகழ்வு மற்றும் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதனால் ஏற்பட்ட காடழிப்பு மற்றும் சூழலியல் பாதிப்புகள், அத்துடன் வடமேல் மாகாணத்தில் தீவிரமடைந்துள்ள யானை–மனித மோதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, குறித்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி பல சுற்றாடல் அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனு தொடர்பில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அழிக்கப்பட்ட 55 ஹெக்டேயர் காணி உள்ளிட்ட ஒதுக்கப்பட்ட வனப் பகுதிகளை உள்ளடக்கிய முழுப் பிரதேசத்தையும் சரணாலயமாக அல்லது யானைகள் முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்ட வனமாகப் பிரகடனப்படுத்துமாறு உத்தரவிட்டது.

இதற்கமைய, நில அளவைத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 682 ஹெக்டேயர் காணி சரணாலயமாகப் பிரகடனப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உடன்பாட்டுடன், அருகிலுள்ள பாலுகடவல குளத்தின் அதிகபட்ச நீர்மட்டப் பகுதியையும் உள்ளடக்கி, குறித்த நிலப்பரப்பை விலங்கினங்கள் மற்றும் தாவரவினங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய நாகொலகனே சரணாலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments