Tuesday, September 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நல்லூரில் தியாக தீபம் திலீபனின் வரலாற்று ஆவணக் கண்காட்சி

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் வரலாற்று ஆவணக் கண்காட்சி

தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நான்காவது வருடமாக நல்லூரில் வரலாற்று ஆவணக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கண்காட்சி, தொடர்ந்து 27ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு நல்லூரில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றபோது, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் இதனைத் தெரிவித்தார்.

திலீபனின் வரலாறு மற்றும் அவரது தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் திலீபனின் குடும்பத்தினர், அவருடன் பயணித்தவர்கள் மற்றும் அவர் கல்வி கற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இணைந்து வரலாற்று ஆவணங்களைத் தொகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட சில பிழைகள் மற்றும் குறைபாடுகள் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் உதவியுடன் திருத்தப்பட்டு, இம்முறை முழுமையான ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நல்லூரில் காட்சிப்படுத்தப்படும் ஆவணக் கண்காட்சி எதிர்வரும் 20 மற்றும் 27ஆம் திகதிகளில் லண்டனிலும், 26ஆம் திகதி பிரான்ஸிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமது பிள்ளைகளையும் இவ்வாறான வரலாற்று நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று, தியாக தீபம் திலீபனின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments