செப்டம்பர் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் இன்று (08) செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. வரும் 11-ஆம் திகதி வரை பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடியதும், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியாக்கப்பட்ட 2489/22 மற்றும் 2493/19 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களின் இரு கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.
பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பிரதானி (நீக்கம் செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும். பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு வரவுள்ளது. உறுப்பினர்களின் 7 தனிநபர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றப் பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரை அமர்வில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன உறுதிப்படுத்தியுள்ளார்.


