Wednesday, September 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திருமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு

திருமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா, முதலீடு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தும் நோக்கில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமார் 250 சுற்றுலாப் பயணிகள் நேற்று(01) திருகோணமலைக்கு வருகை தந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்து சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலைக்கு வருகை தந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரியமான பரதநாட்டிய நிகழ்வுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமாரன், ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் குமார் ஜெயக்குமாரன் கருத்துத் தெரிவிக்கையில், “இது ஒரு ஆரம்பம் மட்டுமே. திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா வளங்கள், இயற்கை அழகு, வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக சாத்தியக்கூறுகளை ஜப்பான் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முதல் படியாக இதனை நான் பார்க்கின்றேன்.”

மேலும், ஜப்பானின் லிட்டில் ஜப்பான் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ருவான் அவர்களுடன் தொடர்ந்து மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்புகளின் ஊடாகவே இந்த ஜப்பானிய சுற்றுலா குழுவை திருகோணமலைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா மற்றும் முதலீட்டுத் திறனை ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு நேரடியாக அறிமுகப்படுத்துவதுடன், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் இலங்கை–ஜப்பான் இணைந்து செயற்படக்கூடிய பொதுவான வாய்ப்புகள் மற்றும் துறைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments