Saturday, August 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் இடம்பெறவுள்ள பாரிய போராட்டம் - மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

யாழில் இடம்பெறவுள்ள பாரிய போராட்டம் – மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகர பிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

பருத்தித்துறை நகரசபையின் 15 ஆவது அமர்வு நேற்று (28) காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நகரபிதா பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். இதன்போது தேசிய மக்கள் சக்தி கட்சி தவிர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தன.

இது தொடர்பில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது நகரத்தின் புராதன சின்னங்கள் / இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் பாரிய ஆர்பாட்ட பேரணி நடாத்தப்பட உள்ளது.

பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கண்டனப் பேரணி ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இப்போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேற்சை குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments