யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்தோடு மழைக்கவசத்துடனும், காலில் காலுறை அணிந்தவாறும் சிறுவனின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்படட்ட 9 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 478 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 464 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று சிறுவனின் ஒரு என்புத் தொகுதி மழைக்காலத்தில் பாவிக்கப்படும் மழைக்கவசத்துடனும், காலில் காலுறை அணிந்தவாறும் காணப்படுகின்றது. அந்த என்புத் தொகுதியைச் சூழ சவப்பெட்டியின் அடையாளங்களும் காணப்படுகின்றன.
மேலும் நேற்றைய அகழ்வில் என்பு எச்சங்கள் குவியல்களாக மூன்று அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு 35, 36, 37 என இலக்கமிடப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆணிகள் மற்றும் சீமெந்திலான தட்டைப் பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 140 சான்றுப்பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


