Tuesday, July 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அரச துறையின் மாற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவு செயலமர்வு

அரச துறையின் மாற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவு செயலமர்வு

அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு” நேற்று (20) கொழும்பில் ஆரம்பமாகியது.

இந்த மூன்று நாள் செயலமர்வை ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களத்தின் (UN DESA) கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவு (DPIDG), அதன் அரச நிர்வாகம் தொடர்பான செயற்திட்ட அலுவலகம் (UNPOG), ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்த செயலமர்வின் பிரதான நோக்கம், தரவுக் கட்டுப்பாடு, டிஜிட்டல் அரச நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவது தொடர்பில், அரச துறையின் சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்துவதாகும். அதற்காக சர்வதேச ரீதியில் நிலவும் மிகச் சிறந்த நடைமுறைகள், தரவு முகாமைத்துவம், ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படக்கூடிய (Interoperable) அரசாங்க அமைப்புகள், நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்குத் தேவையான கொள்கை சார்ந்த மற்றும் நிறுவன ரீதியிலான தயார்நிலை குறித்து பரந்த அளவில் கவனம் செலுத்தப்படுகிறது

மூன்று நாள் நிகழ்ச்சியில், தரவுக் கட்டுப்பாட்டின் கோட்பாடுகள், தேசிய தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை உருவாக்குதல், டிஜிட்டல் அரச சேவைகள், அரச அதிகாரிகளுக்கான செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அம்சங்கள், பொறுப்புணர்வுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், உற்பத்தித்திறன் சார்ந்த (Generative) மற்றும் முகவர் சார்ந்த (Agentic) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் அதற்காக நிறுவன ரீதியிலான செயல் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவை குறித்து தெளிவுபடுத்தப்படும். விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழுச் செயல்பாடுகள் மூலமாக இந்த தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த செயலமர்வில் அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சர்வதேச வளவாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இலங்கையின் அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், சான்றுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதை ஊக்குவிப்பதற்கும் இந்த செயலமர்வு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஆரம்ப நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் Rajesh Pandav, UNPOG பிரதானி Changseob Han மற்றும் GovTech இலங்கை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷெவான் குணதிலக்க ஆகியோர் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments