கொழும்பு, காலி முகத்திடலில் 5000 பரத கலைஞர்கள் பங்கேற்ற கின்னஸ் உலக சாதனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும் அவரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், சங்கமம் குளோபல் அகடமி மற்றும் சங்கமம்லியா ஹொலிடேஸ் ஏற்பாட்டில் இன்று காலி முகத்திடல் வரலாற்று சாதனையை கண்டது.

“சங்கமம் 2026” எனும் பெயரில் நடைபெற்ற இப்பெருவிழாவில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு, 10,000 கால் சலங்கைகளை ஒரே தாளத்தில் ஒலிக்கச் செய்து உலக சாதனை படைத்தனர்.

இன்று காலை கடல் அலைகளின் ஓசையை விட கால் சலங்கைகளின் ஓசை ஓங்கி ஒலித்த காலி முகத்திடல், தமிழ் கலாசார பெருமிதத்தின் அடையாளமாக மாறியது. பரதநாட்டியத்தின் நுணுக்கமும் ஒற்றுமையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் பங்குபற்றிய கலைஞர்களையும் நேரில் சந்தித்து பாராட்டினார். “இலங்கை மண்ணில் தமிழ் கலையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இத் தருணம் இலங்கை மக்களுக்கு கிடைத்த பெருமை” என அவர் தெரிவிதார்.
இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் குழுமியிருந்தனர். சலங்கை ஒலியால் அதிர்ந்த இக்கடற்கரை, இலங்கை தமிழரின் கலைத் திறனுக்கு சான்றாக அமைந்தது.
“சங்கமம் 2026” உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை உறுதி செய்து பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபின் கரங்களுக்கு கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் மூலம் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் கையளிக்கப்பட்டது.


