கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஆறாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இன்றைய தினமும் சுரேஷ் சலேவை நேரில் பார்ப்பதற்காக அவரது மனைவி மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, கடந்த ஆறு நாட்களாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே, தடுப்புக் காவலில் உள்ள தனது கணவரைச் சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் பல தடவைகள் கடிதம் மூலம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.


