பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ஆயுதப் படைகளால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான விடயங்களையும், பொதுமக்களின் கவலைகளையும் ஆய்வு செய்யும் நோக்கில், ஜூன் 2 ஆம் திகதி திருகோணமலையின் பல பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் திருகோணமலையில் காணி, வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் Dr. ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, விமானப்படைத் தளபதி, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்தல் மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கான நடைமுறைசார் தீர்வுகளை அடையாளம் காணும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


