இந்தோனேசியாவில் 243 பேரை ஏற்றிச் சென்ற ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பல், மோசமான வானிலைக்கு மத்தியில் ஜாவா கடல் பகுதியில் தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் நேற்று (12) கிழக்கு ஜாவாவின் சுரபயா (Surabaya) நகரிலிருந்து தெற்கு கலிமந்தன் (Kalimantan) மாகாணத்தில் உள்ள பஞ்சார்மாசின் (Banjarmasin) நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், இன்று(13) அதிகாலை சுமார் 2 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலின் இறுதி நிலை (பஞ்சார்மாசின்) Banjarmasin பகுதியில் இருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் பதிவாகியிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அதன் இருப்பிடம் குறித்த தகவலும் கிடைக்காததால், இந்தோனேசிய மீட்புக் குழுவினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
‘KN SAR Laksmana 241’ என்ற மீட்புக் கப்பல் உள்ளிட்ட குழுக்கள் கப்பலின் இறுதியாக பதிவான நிலையை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன.
கப்பல் மோசமான வானிலையை எதிர்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


