22ஆவது திருத்தத்தை முன்மொழிந்து, அரசாங்கம் பல தரப்பினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்கல்லயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரசாங்கம் சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கையின் தொழில் வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
”வரலாற்றில் அதிகளவு பொய்களை கூறிய அரசாங்கம் ஒன்று இருக்குமானால், ஆட்சிக்கு வருவதற்காக பொய்களை கூறிய ஒருவர் இருப்பாரானால், பொய்களை கூறி ஆட்சிக்கு வந்து, ஆட்சியில் நீடிப்பதற்காகவும் பொய்களை கூறுபவர் ஒருவர் இருப்பாரானால், அவர் எமது தற்போதைய ஜனாதிபதியே” என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார அளவற்ற பொய்களை கூறியுள்ளதுடன் இளைஞர் தலைமுறைக்கு பொய்யான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார். பொய்யான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் சிதைக்கும் வகையிலும் செயற்பட்டார்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


