Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்2.5 மில்லியன் டொலர் ஹேக்! விசாரணைகளில் முன்னேற்றம்!

2.5 மில்லியன் டொலர் ஹேக்! விசாரணைகளில் முன்னேற்றம்!

வெளிநாட்டு கடன் தவணைப் பணமாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் திறைசேரியினால் வெளிநாட்டு கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட இந்த நிதி, கணினி ஹேக்கர்களின் கைக்குச் சென்றமை தற்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நிதி அமைச்சில் நேற்று (24) இது தொடர்பான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாட்டின் 37 பிரதான நிறுவனங்களை இணைத்து விசேட பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பல புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விசாரணைகள் குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“இந்தப் பணப் பரிமாற்றம் வங்கிகள் ஊடாகவே இடம்பெற்றுள்ளது. இது வங்கி முறைமைக்கு வெளியே நடந்த ஒன்றல்ல. விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், என்ன நடந்துள்ளது என்பதையும் நாம் தற்போது கண்டறிந்துள்ளோம். டிஜிட்டல் உலகில் பணம் மிக விரைவாகக் கைமாறக்கூடும் என்பதாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மாறக்கூடும் அல்லது சாட்சியங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதாலும், விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கச் சில தகவல்களை இரகசியமாகப் பேண வேண்டியுள்ளது. நாம் பல புதிய விடயங்களைக் கண்டறிந்துள்ளோம்.” 

“டிஜிட்டல் முறைமையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அனைவரினதும் பொறுப்பாகும். டிஜிட்டல் முறைமைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும். பணப் பரிமாற்றங்களின் போது அதன் துல்லியத்தன்மை குறித்துப் பரிசோதிக்கப்பட வேண்டும்.” 

“டிஜிட்டல் முறைமை ஹேக் செய்யப்பட்டதை விடவும் மேலான ஒரு விடயத்தையே இங்கு நாம் காண்கிறோம். வெளிநாட்டு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியைப் போன்றே போலி மின்னஞ்சல்களை (Email) உருவாக்கித் திசைதிருப்பியுள்ளனர். இது நிறுவனத்திற்குள் இருப்பவர்களின் தொடர்பு இன்றி நடந்த ஒரு விடயமாகும். அவற்றுக்கிடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட சிக்கலே இது.” 

“சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் விசாரணைகள் மூலம் அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு சுமார் ஒரு வார காலம் ஆகலாம்.” 

“தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் (National Cyber Security Operation Center) எனும் பெயரில், அரசாங்கத்தின் பிரதான டிஜிட்டல் முறைமைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

தற்போது 12 நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளதுடன், மேலும் 4 நிறுவனங்கள் இணைந்துகொண்டிருக்கின்றன. மொத்தமாக 37 நிறுவனங்கள் இந்த முறைமையுடன் இணைக்கப்படும்.” 

“அமைப்புகளுக்கு வரும் சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே இனம் காண்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சிறந்த மென்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments