கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய இரு வரலாற்றுப் புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 15 ஆவது “இந்துக்களின் சமர்” (Battle of the Hindus) கிரிக்கெட் பெருவிழா இன்று (13) காலை கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
இந்துக் கல்லூரி கொழும்பின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை சிறப்பிக்கும் வகையில் இம்முறை இப்போட்டி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இன்று காலை 08:30 மணி அளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், பாடசாலை இசைக்குழுக்களின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி மற்றும் இரு பாடசாலைகளினதும் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசியக் கீதம் மற்றும் பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்பட்டு போட்டிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்துக் கல்லூரி கொழும்பின் அதிபர் மற்றும் இளையதம்பி இளங்கேஸ்வரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரத்தினம் செந்தில்மாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆரம்ப நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் நடைபெறும் இந்தப் போட்டி இன்றும் நாளையும் (மார்ச் 13 மற்றும் 14) நடைபெறவுள்ளது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா இரு அணி வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அதனைத் தொடர்ந்து நாணய சுழற்சி இடம்பெற்றதுடன் நாணய சுழற்சியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.
காலை 9:55 மணிக்கு ஆட்டம் ஆரம்பமான நிலையில், இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பெருந்திரளானோர் மைதானத்தில் திரண்டு தமது அணிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
பாரம்பரியமும் கௌரவமும் மிக்க இந்த 15-வது வரலாற்றுச் சமரில் கிண்ணத்தை வெல்லப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.



