நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 திருமணம் செய்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் இந்தியளவில் கவனிக்கப்படும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளது. இதில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் நினைவுகளைப் பகிரும் காட்சிகளில் சில படங்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக, நானும் ரௌடிதான் படப்பிடிப்பின்போது காதலிக்கத் துவங்கியதால் அப்படத்தின் பாடல்களையும் சில காட்சிகளையும் ஆவணப்படத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் காப்புரிமைக்கான ஒப்புதலை அளிக்காமல் மோசமான முறையில் நடந்துகொள்வதாக நடிகை நயன்தாரா இன்று அறிக்கையின் மூலம் கூறியிருக்கிறார்.
இந்த அறிக்கை ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், மேடைக்கு மேடை அன்பை விதைக்கச் சொல்லும் தனுஷ், நயன்தாரா விஷயத்தில் நியாமற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.