கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து கால் நூற்றாண்டு ஆகிறது. அந்தவகையில் வெள்ளி விழா காண்கிறது வள்ளுவர் சிலை.
இதனைக் கொண்டாடும் விதமாக, வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சாதி, மத பேதங்களைக் கடந்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறியவர் வள்ளுவர்.
ஆனால் வள்ளுவருக்கே காவிச் சாயம் பூச ஒரு கும்பல் நினைக்கிறது. வள்ளுவர் எல்லாருக்கும் பொதுவான தமிழர்களின் அடையாளம்.
இதனை முழங்கும் விதமாக டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மாவட்ட வாரியாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25 ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருக்கிறது.
இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் – கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படும்.
➢ அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.
➢ அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்படும்.
➢ வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணைய கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள்,
புது தில்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்படும்.
➢ வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாக திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டி நடத்தப்படும்.
➢ அனைத்து மாவட்ட நூலகங்களிலும், அன்றைய நாள் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு, திருக்குறளின் பெருமையை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் செய்யப்படும்.
➢ திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
➢ டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இந்தியாவின் வரலாற்றை தென் குமரியிலிருந்து எழுத வேண்டும் என்ற நம்முடைய இலக்கின் அடையாளமான கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். உலகெங்கும் உள்ள என் அருமைத்தமிழர்கள் எங்கிருந்தாலும் வருக! வருக! என்று அன்புடன் அழைக்கிறேன்.