மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் டி20 தொடர் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஒருநாள் தொடர் நடைபெற்றது. இரண்டு தொடர்களையும் இலங்கை அணி கைப்பற்றியது.
ஆறுதல் வெற்றி
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேற்று (அக்டோபர் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது. மழையின் காரணமாக ஆட்டம் இடையில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர், இலங்கை 23 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் தலா 56 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடி குசல் மெண்டிஸ் 22 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் செர்ஃபேன் ரூதர்ஃபோர்டு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, மேற்கிந்தியத் தீவுகள் 23 ஓவர்களில் 195 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
எவின் லீவிஸ் சதம் விளாசல்
195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 22 ஓவர்களில் அதிரடியாக 196 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக எவின் லீவிஸ் 61 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. எவின் லீவிஸ் ஆட்ட நாயகனாகவும், சரித் அசலங்கா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.