மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. விழாவில் இந்தியாவில் இருந்து பல மொழி நடிகர்-நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தத் திரைப்பட விழாவில் நடிகர் மாதவனின் புதிய படமும் திரையிடப்படவிருக்கிறது. அஸ்வி தார் இயக்கியுள்ள ஹிஸாப் பராபர் படம் வரும் 26ம் தேதி மாலை 5.45 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் மாதவன் ராதே மோகன் சர்மா எனும் ரயில்வே டிக்கர் கலக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். .தனது வங்கிக் கணக்கில் சிறிய ஆனால் விளக்கமுடியாத முரண்பாடு இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த சிறிய பிரச்னை எப்படி மிகப்பெரிய விசாரணை வளையத்துக்குள் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. மிகப்பெரிய வங்கித் திருடனான நீல் நிதின் முகேஷ் செய்த பண மோசடியை பற்றி விவரிக்கிறது.
ராதே மோகன் சர்மா தனது தனிப்பட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் சமூகத்தின் ஊழலை எதிர்த்து போராடுவார். இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் வழங்குகிறது. எஸ்பி சினிகார்ப் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி குல்ஹரி உடன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் திரையிடல் குறித்து இயக்குநர் கூறியதாவது: இந்திய திரைப்பட விழாவில் எங்களது படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. மேலும், இந்தப் படம் திரில்லர் வகையிலானது. உலகமே ஊழலில் திளைக்கும்போது உணைக்கான போராட்டம் இது..நீதியை நிலைநாட்ட விரும்பும் சாதாரண மனிதனின் போராட்டத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம். படம் முடிந்து வெளியே சென்றாலும் சரி, தவறுக்கு இடையேயான போராட்டங்களை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்றார்.
இப்படம் குறித்து பேசிய மாதவன், “இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்து விடாது என்பதையும் புரிந்து கொள்ள வைக்கும் படம். தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் இந்தப் படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.
தமிழில் அறிமுகமான மாதவன் தற்போது இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக ஜோதிகாவுடன் நடித்த ஷைத்தான் படம் கமர்ஷியல் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.