ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தப்படும் பற்றிகளை (Battery) பயனர்களே எளிதாக அகற்றி மாற்றக்கூடிய வகையில், ஐரோப்பிய ஒன்றியம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் 2027 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன்படி, ஒரு சாதனத்தின் முழு பயன்பாட்டுக் காலத்திலும் அதன் பற்றியை (Battery) பயனர்கள் தாங்களாகவே அகற்றி புதிய பற்றியை (Battery) பொருத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
இதற்காக பற்றியை (Battery) வெறும் கைகளால் இலகுவாக வெளியே எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று விதிமுறை அர்த்தப்படுத்தவில்லை. பற்றியை (Battery) அகற்றுவதற்கு சந்தையில் பொதுவாகக் கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்த பயனர்களுக்கு அனுமதி இருக்கும். எனினும், உற்பத்தியாளர்கள் தங்களுக்கே உரிய சிறப்பு கருவிகள், வெப்பம் அல்லது இரசாயன கரைப்பான்களை கட்டாயமாகப் பயன்படுத்தும் வகையில் சாதனங்களை வடிவமைக்க முடியாது.
சில சந்தர்ப்பங்களில் விசேட கருவிகள் தேவைப்பட்டால், அவை சாதனத்துடன் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பற்றியை (Battery) எவ்வாறு பாதுகாப்பாக அகற்றி புதிய பேட்டரியை பொருத்துவது என்பது தொடர்பான தெளிவான வழிமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தகவல்களை உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். இந்தத் தகவல்கள் இணையத்தில் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய வகையிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சாதன மாடலின் கடைசி அலகு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பின்னரும், அதற்கான மாற்று பற்றிகள் (Battery) குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு உதிரிப் பாகங்களாகக் கிடைக்க வேண்டும்.
அத்துடன், இணக்கமான மாற்று Battery பொருத்தப்பட்ட பின்னர் அது முறையாகச் செயல்படுவதைத் தடுக்கும் வகையிலான மென்பொருள் கட்டுப்பாடுகளுக்கும் புதிய விதிமுறைகள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் விலக்குகள் வழங்கப்படவுள்ளன. உதாரணமாக, பயனர்கள் பற்றியை அகற்றுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய சாதனங்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் தரவின் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு Battery நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சாதனங்களுக்கு சில விலக்குகள் பொருந்தும்.
பற்றிகளின் நிலைத்தன்மையை மேம்படுத்துதல், மின்னணு சாதனங்களின் பயன்பாட்டு காலத்தை நீட்டித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உருவாகும் மின்னணுக் கழிவுகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் பரந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படுகின்றன.


