Thursday, November 5, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்திற்கு புதிய நிர்வாகம்!

யாழ். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்திற்கு புதிய நிர்வாகம்!

யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெயதா தலைமையில் இந்த நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்.மாவட்டத் தலைவராக சிவபாதம் இளங்கோதையும், செயலாளராக கஜேந்திரகுமாரும், பொருளாளராக சத்திய விஜயபாமாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உப தலைவராக விக்னேஸ்வரியும், உப செயலாளராக சுதாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகம் யாழ்.மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக் கோரி முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்து முழுமையாக முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த போராட்டத்தைத் திட்டமிடுவதற்கும், அனைத்து உறவுகளையும் ஒருங்கிணைப்பதற்கும் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலிலும், எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்திலும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பூரண ஆதரவை வழங்குமாறு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments