யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் இன்று (31) கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் பிரதி அமைச்சரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.
முறையாக வழங்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளுக்கான அனுமதிகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, கடல் அட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்குவதால் சிறு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என சில தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும் தொடர்புடைய அதிகாரிகளால் ஆராயப்படவுள்ளன.
இந்த விவகாரத்தில் சிறு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி வெளிப்படைத்தன்மையுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


