பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகப் பாதிக்கப்படக்கூடிய பெண்களைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் போதகராக மாறிய டொராண்டோவைச் சேர்ந்த 37 வயதுடைய பிராண்ட் வாண்டர்ஹைடனுக்கு (Brandt Vanderhyden), நீதிமன்றம் ஏற்கெனவே அனுபவித்த தடுப்புக்காவல் காலத்தைக் கணக்கில் கொண்டு தண்டனை வழங்கியுள்ளது.
வாண்டர்ஹைடன் எதிர்கொண்ட 13 குற்றச்சாட்டுகளில் இரண்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பரி நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2022 செப்டெம்பர் மாதம் பரி பகுதியில் ஒரு பெண்ணை வாடிக்கையாளரிடம் அனுப்புவதற்காக இணையத்தில் பாலியல் சேவை விளம்பரங்களை வெளியிட்டதுடன், அந்தப் பெண்ணை வாடிக்கையாளரிடம் அனுப்பி 240 கனேடிய டொலர்களையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடத்தல், பாலியல் சேவைக்காகப் பெண்ணை ஏற்பாடு செய்தல், ஆயுதத்தைப் பயன்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல பாரதூரமான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டிருந்தார்.
மூன்று வாரங்கள் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்காக நடுவர் குழு தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், திங்கட்கிழமை காலை இரண்டு முறைப்பாட்டாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் எனக் குறிப்பிடப்பட்ட அவர்கள், வழக்கு விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை என அரச தரப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அரச தரப்புக்கும் எதிர்த்தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, ஏற்கெனவே எட்டு மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்ததுடன், சுமார் நான்கு ஆண்டுகள் ஜி.பி.எஸ் கண்காணிப்புக் கருவியுடன் கூடிய கடுமையான வீட்டுக் காவல் நிபந்தனைகளின் கீழ் இருந்த காலமும் கருத்தில் கொள்ளப்பட்டது. மொத்தமாக 18 மாத காலத் தண்டனையை அனுபவித்ததாகக் கணக்கிடப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.
வாண்டர்ஹைடன் கைது செய்யப்பட்ட காலத்தில் கிராக் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது மூன்று ஆண்டுகளாகப் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனது வாழ்க்கையை மாற்றியமைத்து, கடவுள் மற்றும் ஆன்மீக மீட்பை நோக்கி மற்றவர்களை வழிநடத்தும் போதகராகச் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
பிணையில் வெளிவந்திருந்த காலத்தில் குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றியதுடன், போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சையையும் நிறைவு செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் மெலினா மக்கியா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டில் இருந்த நபர் தற்போது இல்லை எனக் குறிப்பிட்ட வாண்டர்ஹைடன், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.


