Monday, November 16, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை

நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை

நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக கூறி சில தரப்பினர் பொதுமக்களை ஏமாற்றி வருவது தொடர்பில் தனது கடுமையான கவனத்தைச் செலுத்தியுள்ளதாக இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல தரப்பினர் இவ்வாறான மோசடிகளுக்கு இலக்காகியுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நெதர்லாந்து குடிவரவுச் சேவை வழங்குவது போன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட கடிதங்களும் தற்போது சமூகத்தில் புழக்கத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசேட சந்தர்ப்பங்களைத் தவிர்த்து, ஏனைய பெரும்பாலான சாதாரண வேலைவாய்ப்புகளுக்கு நெதர்லாந்து தற்போது விசா வழங்குவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயர் திறன்கள் மற்றும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த பதவிகளுக்கு மட்டுமே உண்மையான வேலைவாய்ப்புகள் இருக்கலாமென்றும், ஏனையவை அனைத்தும் போலியானவையே எனவும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.

மேலும், நெதர்லாந்து வேலைவாய்ப்புகளுக்காக எந்தவொரு ஆட்சேர்ப்பையும் தூதரகம் நேரடியாக மேற்கொள்வதில்லை என்பதையும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பல்வேறு தரப்பினரால் உறுதியளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பில் எத்தகைய நிதிப் பரிமாற்றங்கள் அல்லது பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது வழங்குநர்களிடம் அவற்றை நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், இத்தகைய மோசடிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையின் சட்ட அமுலாக்க முகவர் நிலையங்களிடம் உடனடியாகத் தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments