Thursday, October 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாடு முழுவதும் இன்ஃபுளுவென்சா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்ஃபுளுவென்சா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் தற்போது இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதன் பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே விசேட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“எங்களின் கண்காணிப்பு அமைப்பு ஊடாக கடந்த 3, 4 வாரங்களாக இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் அதிகரிப்பை எம்மால் அவதானிக்க முடிகிறது. கடந்த வார நிலவரப்படி பெறப்பட்ட மாதிரிகளில் சுமார் 35% ஆனோர் இன்ஃபுளுவென்சா நோயாளர்கள் என்பது தெரியவருகிறது. 

அதாவது, இக்காலப்பகுதியில் பரவிவரும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினருக்கு இன்ஃபுளுவென்சா தொற்று ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

எனினும், இந்நோய் நிலையானது முறையான சிகிச்சைகளுடன் 3 முதல் 4 நாட்களுக்குள் எவ்வித பெரிய சிக்கலுமின்றி குணமடையக் கூடியதாகும். எனவே, இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

அதேசமயம், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இன்ஃபுளுவென்சா தொற்றினால் சிலவேளைகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்றார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த விசேட வைத்தியர் பாலித கருணாபேம,”இந்நோயானது இருமல் மற்றும் சளி போன்றவற்றுடன் வெளிவரும் நீர்த்துளிகள் ஊடாகப் பரவுகிறது. அதுமட்டுமின்றி தொடுகை மூலமாகவும் இந்நோய் பரவக்கூடும். எனவே, இந்நோயைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் எப்போதும் குறிப்பிடுகிறோம். 

 

இந்நோய் தாக்கியவர்கள் 2, 3 நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுப்பது அவசியமாகும். மேலும், அடிக்கடி சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவுதல் மற்றும் நோய்த் தாக்கம் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுத்துக்கொள்ள முடியும்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments