Sunday, June 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்நச்சு இரசாயன விற்பனை; கனடாவில் 14 பேரின் உயிர் மாய்ப்புக்கு காரணமான நபர்!

நச்சு இரசாயன விற்பனை; கனடாவில் 14 பேரின் உயிர் மாய்ப்புக்கு காரணமான நபர்!

கனடாவில் நச்சு இரசாயனங்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்து, 14 பேரின் உயிர் மாய்ப்புக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை 60 வயதான கென்னத் லா ஒப்புக்கொண்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் சமையல்காரரான இவர், உயிர் மாய்ப்பு தொடர்பான ஆன்லைன் கலந்துரையாடல் தளங்கள் மூலம் பழகிய 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 1,200 நச்சு இரசாயனப் பொதிகளை விநியோகித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்வாசிப் பொதிகள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவை

இதில் கால்வாசிப் பொதிகள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவை ஆகும். வெள்ளிக்கிழமை அன்று ஒன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசுத் தரப்புடன் ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து, அவர் மீதான கடுமையான கொலைக் குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கனடாவைச் சேர்ந்த உயிர் மாய்ப்பு செய்துகொண்ட நபர்கள் தொடர்பானவை மட்டுமே.

ஆனால், பிரிட்டனில் கென்னத் லா வழங்கிய நச்சுப் பொருட்களால் உயிரிழந்த 79 பேரின் மரணங்கள் தொடர்பாக அவர் மீது பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்குத் தொடராதது அங்குள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரிட்டனின் ‘அரசு வழக்கறிஞர் திணைக்களம்’ தெரிவித்துள்ளதாவது,

கென்னத் லாவிற்கு கனடாவில் வழங்கப்படும் தண்டனையின் போது பிரிட்டன் மரணங்களும் கணக்கில் கொள்ளப்படும் என்ற அடிப்படையிலேயே இந்த சமரச உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. அவரை பிரிட்டனுக்கு நாடுகடத்த முயன்றால், அதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்யக்கூடும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் அல்லது ‘இரட்டைத் தண்டனைத் தடை’ கோட்பாட்டின் கீழ் அது முடக்கப்படலாம்.

எனவே, கனடாவின் தண்டனை செயல்முறையிலேயே பிரிட்டன் விக்டிம்களையும் இணைப்பதே நீதிக்கான “விரைவான மற்றும் பயனுள்ள வழி” ஆகும்.

கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு மனநலத்தால் பாதிக்கப்பட்டு, 2023 மார்ச்சில் உயிர் மாய்ப்பு செய்துகொண்ட ஆஷ்டினின் தாய் கிம் புரோசர் கூறுகையில், “யாரோ ஒருவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அமர்வதால் என் மகனை இழந்த வலி குறைந்துவிடாது” என வேதனை தெரிவித்துள்ளார்.

கென்னத் லாவிடம் வெறும் 50 பவுண்டுகள் செலுத்தி நச்சுப் பொருளைப் பெற்று 2021 இல் உயிர் மாய்ப்பு செய்துகொண்ட தாமஸின் தந்தை டேவிட் பார்ஃபெட் கூறுகையில், “கென்னத் லா குற்றத்தை ஒப்புக்கொண்டது நல்லதே எனினும், அவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு என் மகனின் மரணத்திற்குப் பதிலளித்திருக்க வேண்டும். இது போன்ற தடுக்கக்கூடிய உயிர் மாய்ப்புகளைத் தடுக்க பிரிட்டன் அரசு பொது விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ரகசிய புலனாய்வில், கென்னத் லா ஒரு வாடிக்கையாளர் போல பேசிய நிருபரிடம் தனது தயாரிப்புகளைப் பயன்படுத்தி “எவ்வாறு மரணத்தை உறுதி செய்வது” என்று ஆலோசனை வழங்கியது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 12 நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு விசாரணையின் பின்னர், 2023 மே மாதம் கென்னத் லா கைது செய்யப்பட்டார். கனடா சட்டப்படி உயிர் மாய்ப்புக்குத் தூண்டுதல் அல்லது உதவி செய்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments