கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வெஸ்ட்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று உணவு விநியோக லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.
வாயில் பகுதியிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், இரவுநேர நிறுத்தப் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டபோதே, அங்கே நிறுத்தப்பட்டிருந்த உணவக லொறியின் மீது விமானத்தின் இறக்கை முனை மோதியதாக வெஸ்ட்ஜெட் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது விமானத்திற்குள் பயணிகளோ அல்லது விமானப் பணிக்குழுவினரோ இருக்கவில்லை என்றும், இதனால் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விமானம் பறப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் இது தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறோம், எனினும் இதற்கென தனிப்பட்ட விசாரணை அதிகாரிகளை அனுப்பவில்லை என போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, எச்சரிக்கை விளக்குகள் மற்றும் சைரன் ஒலிகளுடன் குறைந்தது 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தினால் விமானத்திற்கோ அல்லது லொறிக்கோ ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும், இச்சம்பவத்தால் விமான நிலையத்தின் இயல்பு சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பியர்சன் விமான நிலைய நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.


