மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தப் போட்டியில் அவா் கோப்பை வென்றது இதுவே முதல் முறையாகும்.
உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான அவா், சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் 3-6, 6-4, 7-6 (7/2) என்ற செட்களில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் ஜெங் கின்வென்னை வீழ்த்தி வாகை சூடினாா்.
இருவரும் சந்தித்தது இது 2-ஆவது முறையாக இருக்க, கௌஃப் 2-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கின்வென்னும், 2-ஆவது செட்டை கௌஃபும் கைப்பற்றியிருந்தனா். வெற்றியாளரை தீா்மானிக்கும் 3-ஆவது செட்டில் ஒரு கட்டத்தில் 0-2 எனவும், பின்னா் 3-5 எனவும் பின்தங்கியிருந்த கௌஃப், அதிலிருந்து அதிரடியாக மீண்டும் ஆட்டத்தை டை பிரேக்கருக்கு கொண்டு சென்று வெற்றியை தனதாக்கினாா்.
முன்னதாக, உலகின் டாப் 2 வீராங்கனைகளான, பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோரை குரூப் சுற்றில் வீழ்த்தியிருக்கிறாா் கௌஃப்.
வெற்றிக்குப் பிறகு பேசி கௌஃப், ‘இந்தப் போட்டியில் நான் எவ்வாறு தோற்கப்போகிறேன் என்று சில கருத்துகள் எழுந்தன. அதற்கு எனது ஆட்டத்தால் பதில் சொல்ல வேண்டும் என நினைத்தேன். அந்த விமா்சனங்களை எனக்கான உத்வேகமாக எடுத்துக்கொண்டு இப்போது வென்றிருக்கிறேன்’ என்றாா். சாம்பியனான கோகோ கௌஃபுக்கு ரூ.40.50 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இரட்டையா்
இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் நியூஸிலாந்தின் எரின் ரூட்லிஃபே/கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி இணை 7-5, 6-3 என்ற செட்களில், 8-ஆம் இடத்திருந்த செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா/அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட் கூட்டணியை வீழ்த்தி கோப்பை வென்றது.
இப்போட்டியில் தங்கள் நாட்டிலிருந்து இரட்டையா் பிரிவில் சாம்பியனான முதல் வீராங்கனைகள் என்ற பெருமையை ரூட்லிஃபே, டப்ரௌஸ்கி பெற்றுள்ளனா். இந்தக் கூட்டணிக்கு, இது அவா்களின் 4-ஆவது பட்டமாகும்.
இந்தப் போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் சாம்பியனான முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை கௌஃப் பெற்றுள்ளாா். இதற்கு முன், முன்னாள் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் 2014-இல் இங்கு வாகை சூடினாா். போட்டி தொடங்கப்பட்டது முதல் (1972) சாம்பியனான 4-ஆவது அமெரிக்கா் கௌஃப். அவருக்கும் முன், கிறிஸ் எவொ்ட், டிரேசி ஆஸ்டின், செரீனா வில்லியம்ஸ் வாகை சூடியுள்ளனா்.
இப்போட்டியில் கடந்த 20 ஆண்டுகளில் கோப்பை வென்ற இளம் வீராங்கனை (20) என்ற சாதனை கௌஃப் வசமாகியுள்ளது. முன்னதாக, ரஷிய முன்னாள் நட்சத்திரமான மரியா ஷரபோவா 2004-இல் தனது 17-ஆவது வயதில் சாம்பியனாகினாா். கௌஃப் அந்த ஆண்டுதான் பிறந்தவராவாா். அதற்குப் பிறகு சாம்பியனானவா்களில் கௌஃபே இளம் வயது வீராங்கனை.
கௌஃப் – கின்வென் மோதிய இறுதிச்சுற்று 3 மணி நேரம், 4 நிமிஷங்கள் நீடித்தது. போட்டியில் ஆட்ட நேரத்துக்கான பதிவுகள் தொடக்கப்பட்ட 2008 முதல், மிக நீண்ட நேர இறுதிச்சுற்றாக இந்த ஆட்டம் பதிவாகியுள்ளது.