Saturday, October 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் முதல் காட்சிக் கலைத் தூதராக பால் வோங்!

கனடாவின் முதல் காட்சிக் கலைத் தூதராக பால் வோங்!

கனடாவின் கலைத்துறையை ஊக்குவிப்பதற்காக, அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் முதன்முறையாக காட்சிக் கலைத் தூதராக பால் வோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் காட்சிக் கலை, பல்லூடகக் கலை மற்றும் பிரமாண்டமான பொதுக் கலை நிறுவல்களில் முன்னோடியாகக் கருதப்படும் பால் வோங், இந்தப் புதிய பொறுப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கனடாவின் கலைத்துறையை மேம்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பதவி, கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக CTV News ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், இந்தப் பதவி முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதால், அதன் வாயிலாக எவற்றைச் சாதிக்க முடியும் என்பதை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கலைஞர்கள் தமது கற்பனைத் திறனைப் பயன்படுத்தி புதிய சிந்தனைகளையும் கதைகளையும் உருவாக்கி, பல்வேறு வழிகளில் மக்களுடன் தொடர்புகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டங்களை உருவாக்குபவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், கனேடியக் கலைஞர்களுக்கான ஆதரவையும் ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் எனத் தாம் நம்புவதாகவும் பால் வோங் கூறினார்.

வான்கூவரில் வசிக்கும் பால் வோங், திரைப்படம், காணொளி, ஒலிக்கலை, புகைப்படம், சிற்பம், நிறுவல் கலை, அச்சுக்கலை, நியான் கலை, நிகழ்த்துகலை மற்றும் எழுத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு கலைத் துறைகளில் பங்களித்து வருகிறார்.

கனடாவில் திறமையான திரைப்படத் தயாரிப்பாளர்கள், சிற்பக் கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கதைசொல்லிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் கலைச் சமூகத்தினர் நீண்டகாலமாக முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பதவி, அந்நாட்டின் கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments