இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை முன்னெடுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய பொருளாதார அழுத்தங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக புதிய நடவடிக்கை
அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி “ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்” என்ற திட்டத்தை அறிவித்திருந்தார்.
இதன் மூலம் ஈரானின் பொருளாதார பாதைகளை முடக்குவதுடன், அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் மீது இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மோடி–பெசெஷ்கியான் சந்திப்பு
கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியா–ஈரான் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை, சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி வெளியிட்டுள்ள பதிவு
இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஈரானுடனான நீண்டகால நட்புறவை பல்வேறு துறைகளில் மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்த விரும்புவதாகவும், பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையால் பரபரப்பு
ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி ஈரான் அதிபரை சந்தித்து வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே, ஈரானுடன் வர்த்தக உறவுகளை தொடரும் நாடுகள் மீது அமெரிக்கா எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது என்பது தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


