இந்தியாவின் இமையமலைத்தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ரிம்பி கிராமத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று (24) வியாழக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மேற்கு சிக்கிமின் யுக்சோம்-தாஷிடிங் பகுதியின் சில இடங்களில் பாறைகள், சேறு மற்றும் குப்பைகள் வேகமாக சரிந்து ரிம்பி கிராமத்தை மூடியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இதுவரை உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ எதுவும் பதிவாகவில்லை.
நிலச்சரிவு தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் சேறும் குப்பைகளும் கிராமத்தை நோக்கிப் பாய்ந்து வருவதையும், பல வீடுகள் சேதமடைவதையும் காண முடிகிறது. இதன் விளைவாக 30-க்கும் மேற்பட்ட வீடுகள் குப்பைகள் மற்றும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
தொடர் மழையானது அருகிலுள்ள குடியிருப்புகள், சொத்துக்கள் மற்றும் சாலைப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அதிகாரிகள் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


