Thursday, September 17, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இங்கிலாந்துக்கு எதிரான ரி20 - லஹிரு உதாரவுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 – லஹிரு உதாரவுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ரி20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணியின் ஆடும் லெவனில் இளம் தொடக்க வீரர் லஹிரு உதார இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சௌத்தாம்ப்டனில் இன்று நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் உதார தேர்வு செய்யப்பட்டால், இருதரப்பு ரிடி20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணிக்காக அவர் களமிறங்குவது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு குவாங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணிக்காக அவர் விளையாடியிருந்தார். எனினும், இருதரப்பு தொடர், முத்தரப்பு தொடர் அல்லது ஐ.சி.சி. போட்டிகளில் ரி20 சர்வதேசப் போட்டியில் அவர் இதுவரை விளையாடவில்லை.

சர்வதேச ரி20 அனுபவம் குறைவாக இருந்தாலும், உள்நாட்டு ரி20 போட்டிகளில் உதாரா கணிசமான அனுபவத்தைப் பெற்றுள்ளார். 85 இன்னிங்ஸ்களில் 23க்கும் அதிகமான சராசரியுடன் 1,883 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி ரொயல்ஸ் அணிக்காக விளையாடிய உதாரா, ஒன்பது இன்னிங்ஸ்களில் 434 ஓட்டங்களைப் பெற்று தொடரின் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராகத் திகழ்ந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டமே இலங்கை ரி20 அணியில் இடம்பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

காயம் காரணமாக குசல் மெண்டிஸ் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முழுவதிலிருந்தும் விலகியுள்ள நிலையில், அவர் வகித்த தொடக்க வீரர் இடத்திற்கு லஹிரு உதார பரிசீலிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவரது தேர்வு உறுதி செய்யப்பட்டால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி தனது சர்வதேச ரி20 பயணத்தை உதார ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 – லஹிரு உதாரவுக்கு வாய்ப்பு

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments