நடிகர் வடிவேலுக்கு எதிராக எந்த அவதூறு கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் என்று கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்துள்ளார்.
நடிகர் வடிவேலு, சிங்கமுத்து இடையேயான பிரச்னை திரையுலகத்தை தாண்டியும் பிரபலம். இவர்கள் இருவரிடையே நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சூழலில், சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதில் தம்மை பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் சிங்கமுத்து பேசுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிங்கமுத்து தொடர்ந்து அவதூறாக பேசுவதாக வடிவேலு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதற்கு சிங்கமுத்து தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட், வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடாது, அதற்கான உத்தரவாத மனு தாக்கல் செய்யவேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள அவதூறு வீடியோக்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுப்படி, வடிவேலு குறித்து அவதூறு பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அடங்கிய மனு ஒன்று சிங்கமுத்து தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.