My Blog

இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி சீனாவை சேர்ந்தவர் கைது

தினம், தினம் பல்வேறு விதமான மோசடிகளும் முறைகேடுகளும் நாட்டில் நடந்து வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக, ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனால், ஆயிரம் ரூபாய் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள், தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இந்தநிலையில் டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ் அச்சுதன், சைபர் கிரைம் போர்ட்டலில் 43.5 லட்சம் ரூபாய் தன்னிடம் மோசடி செய்ததாக புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அவர் அளித்த புகாரில், பங்குச்சந்தை குறித்து பயிற்சி எடுப்பதாகக் கூறி வகுப்பில் கலந்து கொள்ள வைத்தார்கள். அதனை தொடர்ந்து முதலீடு செய்வதாகக் கூறி என்னை ஏமாற்றி பல முறை ஆன்லைன் மூலம் பணத்தை வாங்கிக்கொண்டனர். நான் அனுப்பிய பணம், பலரின் வங்கி கணக்குகளில் எனது பணம் மாற்றப்பட்டது. அந்த வங்கி கணக்குகள் எல்லாமே குற்றவாளிகளுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். அதில் பல வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது தெரிந்தது. அதில் ஒரு வங்கிக்கணக்கை ஆய்வு செய்ததில், டெல்லியில் உள்ள முன்ட்கா பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் பெயரில் அது செயல்பட்டது தெரியவந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து விசாரணையை துரிதபடுத்தியதில் மோசடியில் ஈடுபட்ட சீனா நாட்டை சேர்ந்தவரான பங் சென்ஜின் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததும், அவர் மீது ஆந்திரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் 17 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version